நன்மை அளிக்கும் இறைவன்...
பழைய திருமுனைப்பாடி நாட்டில் கடிலம், பெண்ணை ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஊர் திருநாவலூர். இங்குள்ள கோயில் நான்கு யுகங்களுக்கு முன்பே தோன்றியதாகும். இந்தக் கோயில் முன்பு "திருத்தொண்டீச்சரம்' என்றும், இதனைச் சுற்றியுள்ள இடம் "திருநாவலூர்' என்றும் "ஜம்புநாதபுரி' என்றும் அழைக்கப்பட்டது.
தற்போது "திருநாமநல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 219-ஆவது தலமாகவும் நடுநாட்டின் 22 தலங்களில் எட்டாவது தலமாகவும் திகழ்கிறது.
மூலவர் பக்தஜனேசுவரர், நாவல் வனத்திலிருந்து சுயம்புவாகத் தோன்றியதால், "நாவலீசுவரர்', "ஜம்புநாதேசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் மனோண்மணி "சுந்தரநாயகி', "நாவலாம்பிகை' என்றும் அழைக்கப்படுகிறார். தீர்த்தம் கடிலம் ஆறு. கோமுகி தீர்த்தம். தல விருட்சம் நாவல் (ஜம்பு) 64 நாயன்மாரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த தலம்.
சுக்கிரன் நவக்கிரகங்களில் ஒருவராவதற்கு முன் காசியில் தங்கி சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள், சுக்கிரனைத் தங்கள் குல குருவாக ஏற்றனர். தேவாசுரப் போரில் இறந்த அசுரர்களை சுக்கிரன் தன் சஞ்சீவினி மந்திரத்தால் உயிர்ப்பிக்கச் செய்தார். இதைப்பார்த்த தேவர்கள் நியதிக்கு மாறாக நடைபெறுவதை சிவனிடம் முறையிட்டனர்.
சிவனும் சுக்கிரனுக்கு வரம் அருளிய தவறை உணர்ந்து தொடர்ந்து தவறு நடக்காமல் இருக்க சுக்கிரனை தானே விழுங்கினார். சிவன் வயிற்றுக்குள் சென்ற சுக்கிரன் அங்கிருந்தே யோகத்தில் ஆழ்ந்தார். சிவன் அவருடைய வழிபாட்டை மெச்சி வயிற்றுக்குள் இருந்த அவரை வெளியே எடுத்து நவக்கிரகப் பதவி கொடுத்து அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப செல்வத்தை வழங்கி வருமாறு உத்தரவிட்டார்.
பூலோகம் வந்த சுக்கிரன் தன் வக்ர தோஷம் நீங்க ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபாடு செய்தார். அந்த இடம்தான் திருநாவலூர். சுக்கிரன் ஸ்தாபித்த லிங்கத்தை மூலவராகக் கொண்டு பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.
இந்தக் கோயில் முதலாம் பராந்தக சோழனின் 28} ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 935) கருவறை, உள் மண்டபம் ஆகியவை கற்றளியாக்கப்பட்டுள்ளது. அவரது மூத்த மகன் இராஜாதித்தன் இப்பணியை தலைமையேற்று செய்ததால், அவரது பெயரும் சேர்த்து திருத்தொண்டிசுவரமான ராஜாதித்த ஈஸ்வரம் என்று கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டது.
சுமார் 80 அடி உயர ஐந்து நிலைமாடங்களும், ஐந்து கலசங்களும் கொண்ட கோபுரம். ஐந்து நிலைமாடத்திலும் இருபுறமும் துவார பாலகர்கள், பலிபீட விநாயகர் உள்ளனர். துவஜஸ்தம்பத்தின் முன் கி.பி.10 நூற்றாண்டைச் சார்ந்த சிறு மண்டபத்தில் 4 அடி உயர நந்தியம்பெருமான் உள்ளார். வெளித்திருச்சுற்றில் கோபுரத்தை அடுத்து மேற்கு முகமாக உள்ள சந்நிதியில் சுந்தரர் தன்னிரு மனைவிருடன் வீற்றிருக்கிறார். மூலவர் கிழக்கு நோக்கிய வண்ணம் அருள்பாலிக்கிறார்.
சுந்தரர், சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி, அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம்.
"கோயிலில் கோஷ்ட மூர்த்தியாகவுள்ள தட்சிணாமூர்த்தியின் உருவம் ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில், வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு அதிசயத்தக்கது.
இவரிடம் சுந்தரர் பூராட நட்சத்திரத்தில் ஞான உபதேசம் பெற்றார். அதனடிப்படையில், இங்கு அருளும் தட்சிணாமூர்த்தி பூராட நட்சத்திரத்துக்கு உகந்தவர். இவரை பூராட நட்சத்திர அன்பர்கள் வழிபட்டால், அவர்களுக்கு நன்மை உண்டாகும்' என்பது ஐதீகம்.
பிரதி வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரன் வழிபட்ட சுக்கிர லிங்கத்துக்கும், சுக்கிரனுக்கும் சிறப்பு வழிபாடுகள் இங்கு பிரசித்தி பெற்றது.
"சுக்கிரன் தன் வக்ர தோஷம் நீங்க அருள்பாலித்த தலம். நரசிம்ம அவதாரம் எடுக்க விரும்பிய விஷ்ணுவுக்கு ஆற்றலை அளித்தத் தலம், பார்வதிதேவி சிவபூஜை செய்த தலம், ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினை உட்கொண்டதால் கருநிறமடைந்த கருடன் சிவபூஜை செய்து விஷம் நீங்கப்பெற்ற தலம், சுந்தரரின் தந்தையாரான சடையநாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய பெரும்பதி சுந்தரரின் தாயாரான இசைஞானியார் வாழ்ந்து, தொண்டாற்றி முக்தி பெற்ற தலம்' என்று பல்வேறு வகைகளில் சிறப்புமிக்கது இந்தத் தலம்.
சிறப்புவாய்ந்த இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் நவ. 22}இல் நடைபெற்று, தற்போது மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நெய்வாசல் நெடுஞ்செழியன்