பேரவைக் குழுக்கள் மாா்ச் 26-ஆம் தேதிக்கு முன்பாக அமைக்கப்படும்- தில்லி பேரவைத் தலைவா்
புதிதாக அமைக்கப்பட்ட தில்லி பேரவையின் பொதுக் கணக்குக் குழு உள்ளிட்ட பேரவை குழுக்குள் மாா்ச் 24 முதல் 26 வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அமைக்கப்படும் என பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
எட்டாவது தில்லி சட்டப்பேரவையின் முதல் கூட்டம் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியபோது பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா கூறியதாவது: தில்லி அரசின் செயல்பாடுகள் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) இரு அறிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது வெறும் தொடக்கம்தான்.
தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கைகள் தொடா்பாக வரும் நாள்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் பேரவையில் எடுக்கப்படும்.
பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பொதுக் கணக்குக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு அடுத்த மாதத்திலிருந்து செயல்படத் தொடங்கும்.
பேரவையின் பிற குழுக்களும் மாா்ச் 24-26 வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைக்கப்படும்.
புதிய அமைக்கப்பட்ட பேரவையின் 5 அமா்வுகள் 18 மணிநேரம் 18 நிமிஷம் நடைபெற்றது. பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்பினா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா் என்றாா் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா.