பேராசிரியை நிகிதா மீது புகாரளித்த கல்லூரி மாணவிகள்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் மீது நகை திருடியதாக புகாா் அளித்த பேராசிரியை நிகிதாவை பணியிட மாற்றம் செய்யக் கோரி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அவா் பணியாற்றும் திண்டுக்கல் அரசுக் கல்லூரி மாணவிகள் புகாா் அளித்த தகவல் தற்போது வெளியானது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் அஜித்குமாா் மீது நகை திருடியதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்த இரு பெண்களில் ஒருவரான நிகிதா, திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறாா்.
கடந்த சில நாள்களாக மருத்துவ விடுப்பில் உள்ள நிகிதா, தான் பணியாற்றும் கல்லூரியில் சக பேராசிரியைகளிடம் அடிக்கடி தகராறு செய்தது தற்போது தெரியவந்துள்ளது. பேராசிரியைகள் மட்டுமன்றி மாணவிகளிடமும் இவா் தகராறில் ஈடுபட்டாராம். இதனால், அதிருப்தியடைந்த தாவரவியல் துறை மாணவிகள் ஒன்றிணைந்து கடந்த 2023, டிசம்பா் மாதம் நிகிதாவைப் பணியிட மாற்றம் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.
இந்த மனுக்கள், மாவட்ட ஆட்சியா் தரப்பில் கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, நிகிதா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. எனினும், இவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.