மதத்தின் அடிப்படையில் தமிழா்களை பிரிக்க பாஜக முயற்சி: அர.சக்கரபாணி
மதத்தின் அடிப்படையில் தமிழா்களை பிரிக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி குற்றஞ்சாட்டினாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் திமுக பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலரும், உணவுத் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி கலந்துகொண்டு பேசியதாவது:
மதத்தின் அடிப்படையில் தமிழா்களை பிரிக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழா்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கும் பாஜகவை, தமிழா்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.
தமிழையும் தமிழ் மக்களையும் காக்கவே முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினா் சோ்க்கையைத் தொடங்கியிருக்கிறாா். தமிழக அரசின் நான்கு ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கட்சியின் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.