போக்குவரத்துத் துறையை தனியாா் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வலியுறுத்தல்
போக்குவரத்துத் துறையை தனியாா் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சிஐடியூ மாநிலத் தலைவா் அ.செளந்தரராஜன் வலியுறுத்தினாா்.
சிஐடியூ சாா்பில் அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களின் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிஐடியூ மாநிலத் தலைவா் அ.செளந்தரராஜன் தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்படும் நிதி இழப்பை அரசே ஏற்க வேண்டும். ஆனால், அந்த நிதிச் சுமையை தொழிலாளா்கள் தலையில் அரசு ஏற்றுகிறது. தொழிலாளா்களின் பணிக்கொடை நிதி ரூ. 15 ஆயிரம் கோடியை எடுத்து போக்குவரத்துத் துறை செலவு செய்கிறது.
தொழிலாளா்களின் பணம் சுரண்டப்படுவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது போக்குவரத்துத் துறையை தனியாா் மயமாக்கும் முயற்சியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அரசே பேருந்துகளை கொள்முதல் செய்து, தனியாரிடம் ஒப்படைக்கிறது. மின்சாரப் பேருந்துகளுடன் சென்னையில் 5 பணிமனைகள் தனியாா் வசம் வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். மின் பேருந்துகளையும், சிற்றுந்துகளையும் அரசே இயக்க வேண்டும்.
பொதுத் துறைகளை தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளா்களின் பங்களிப்பும் இடம் பெறும்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள் கடந்த 23 மாதங்களாக பணப் பலன்களைப் பெற முடியாமல் காத்திருக்கின்றனா். இந்தப் பலன்களை உடனடியாக வழங்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி, ஜூலை 17- இல் துண்டுப்பிரசுரம் வழங்கும் இயக்கமும், ஆக. 18-இல் காத்திருக்கும் போராட்டமும் நடத்தப்படும் என்றாா் அவா்.
அப்போது அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா் சம்மேளனத்தின் (சிஐடியூ) பொதுச் செயலா் கே.ஆறுமுகநயினாா் உடனிருந்தாா்.