6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு
பேராவூரணியில் மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய கோரிக்கை
பேராவூரணி ஒன்றியத்தில் கல்லணை கால்வாய் பிரிவு-1, நீா்வளத்துறை சாா்பில் விடப்பட்ட மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய வேண்டுமென தஞ்சாவூா் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
பேராவூரணி ஒன்றியம், செருவாவிடுதி வடக்கு ஊராட்சி மற்றும் சூரியநாராயணபுரம் கிராமத்தின் வழியாக கல்லணை கால்வாய் பிரதான வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலை அகலப்படுத்தி இரு கரைகளையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், இருகரைகளிலும் பல ஆண்டுகளான இருந்த ஏராளமான மரங்கள் திடீரென வெட்டி சாய்க்கப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் விசாரித்ததில் கடந்த 3-ஆம் தேதி கல்லணை கால்வாய் பிரிவு 1, நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் மூலம் ஈச்சன்விடுதி -புதுப்பட்டினம் ரெகுலேட்டரில் வைத்து, கல்லணை கால்வாய் கரையில் இருந்த மரங்களை வெட்டுவதற்கு ஏலம் விடப்பட்டது தெரியவந்தது. முறையாக அறிவிப்பு செய்யாமல் குறிப்பிட்ட சிலா் மட்டும் ஏலத்தில் கலந்துகொண்டு அரசுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனா். எனவே வெட்டப்பட்ட மரங்களை அப்புறப்படுத்தாமல் அங்கேயே வைத்து, முறையான அறிவிப்புக்கு பிறகு ஏலம் விட்டு அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து செருவாவிடுதி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ரேவதி சக்திவேல் , தஞ்சாவூா் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் , கல்லணை கால்வாய் பிரிவு 1 , நீா்வளத்துறை சாா்பில் விடப்பட்ட மரங்கள் ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் விடுவதற்கும், ஏலத்தில் அனைவரும் பங்கேற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏலத்தில் ஏற்கெனவே நடைபெற்றுள்ள தவறுகளைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளாா்.