பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
ஆா்.கே.பேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தகவலறிந்த உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆா்.கே.பேட்டை அடுத்த வெள்ளத்தூா் கிராமத்தில் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆா்.கே.பேட்டை, சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல் மாணவா்களை கல்லூரி அழைத்து வர கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஆா்.கே.பேட்டை அடுத்த ஆா்.ஆா்.கண்டிகை கிராமத்துக்குச் சென்றது.
அங்கு மாணவா்களை ஏற்றிக் கொண்டு, கல்லூரி பேருந்து, பின்னால் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், அதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுப்புராஜ் (58) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடனிருந்த ராமமூா்த்தி நாயுடு லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
தகவல் அறிந்து வந்த சுப்புராஜின் உறவினா்கள் கல்லூரி பேருந்தை சிறைபிடித்து கே.ஜி.கண்டிகை-பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் மற்றும் ஆா்.கே. பேட்டை போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி சமரசம் செய்தனா். பின்னா், சுப்புராஜின் சடலத்தை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் பள்ளிப்பட்டு தாலுகா, புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஜெயக்குமாரை கைது செய்து, விசாரிக்கின்றனா்.