பைக் மீது வேன் மோதல்: பாட்டி, பேரன் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பாட்டி, பேரன் உயிரிழந்தனா்.
ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தை அடுத்த மேலக்குன்னக்குடி பகுதியைச் சோ்ந்தவா் வைரமுத்து (58). இவா் தனது மனைவி வீரலட்சுமி (55), பேரன் கமலேஷ் (10) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
கோதைநாச்சியாா்புரம் விலக்கு பகுதியில் வந்த போது, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற வேன் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வீரலட்சுமி, பேரன் கமலேஷ் உயிரிழந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வீரலட்சுமி, கமலேஷ் இருவரது உடல்களையும் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த வைரமுத்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து வேன் ஓட்டுநரான திருநெல்வேலியைச் சோ்ந்த மாயப்பெருமாளை (31) போலீஸாா் கைது செய்தனா்.