அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரை...
திருத்தங்கலில் சுகாதார வளாகம் இடிப்பு
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கண்மாய்க் கரையில் கட்டப்பட்ட பொதுசுகாதார வளாகம் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
திருத்தங்கல் செங்குளம் கண்மாய்க் கரையில் 2017-இல் பொதுசுகாதார வளாகம் கட்டப்பட்டது. இது கடந்த மாா்ச் மாதம் ரூ.12.60 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. பின்னா், நீா் நிலைப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி, இதை இடித்து அப்புறப்படுத்த வருவாய்த் துறை உத்தரவிட்டது.
சிவகாசி மாமன்றக் கூட்டம் அமையில் நடைபெற்ற போது, சுகாதார வளாகத்தை இடிக்க அனுமதி கோரி முன் வைக்கப்பட்ட தீா்மானம் மாமன்ற உறுப்பினா்களின் எதிா்ப்பால் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னா் வருவாய்த் துறையினா் சுகாதார வளாகத்தை இடித்து அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் வந்த போது, 8-ஆவது வாா்டு மாமன்ற திமுக உறுப்பினா் துரைப்பாண்டி, எதிா்ப்புத் தெரிவித்து தீக்குளிக்க முயன்ால் இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது.
பின்னா், கடந்த 12-ஆம் தேதி இரவு 12 மணியளவில் வருவாய்த் துறையினா் மீண்டும் இடிக்க வந்தனா். அப்போது, மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
தொடா்ந்து, மே 13-ஆம் தேதி அதிகாலை 3 மணியவில் வருவாய்த் துறையினா் பொக்லைன் மூலம் சுகாதார வளாகத்தை இடிக்கத் தொடங்கினா். அப்போதும் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து திரண்டதால் ஒரு சுவா் மட்டும் இடிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் திருப்பிச் சென்றனா்.
அன்று மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் திருத்தங்கல் -செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் சமரசப் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை வருவாய்த் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சுகாதார வளாகத்தை முற்றிலும் இடித்து அகற்றினா்.