அருப்புக்கோட்டை ரயில் நிலைய சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள ரயில் நிலைய சாலையைச் சீரமைக்கக் கோரி, முன்னாள் ராணுவத்தினா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் ரயில்வே அதிகாரியிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டையில் நகராட்சி மேல்நிலை குடிநீா்த் தொட்டியின் கீழ் பகுதி வழியாக ரயில் நிலையத்துக்கு செல்லக் கூடிய சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலை சேதமடைந்திருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்தச் சாலையோரங்களில் கடந்த 2018- ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை முன்னாள் ராணுவத்தினா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிலையில், இந்த சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இந்த மரங்களைப் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடா்ந்து, இந்தச் சங்கத்தின் செயலா் சுகுமாா் தலைமையில் நிா்வாகிகள் ரகுராமன், சுப்புராஜ் உள்ளிட்டோா் அருப்புக்கோட்டை ரயில்வே அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இந்த மனுவில், மிகவும் மோசமான நிலையில் உள்ள அருப்புக்கோட்டை ரயில் நிலைய சாலையைச் சீரமைக்க மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.