பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தியவா் கைது
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பைக்கில் மதுப்புட்டிகளைக் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மயிலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தழுதாளி பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தமிழ்ச்செல்வன், தலைமைக் காவலா் முருகையா, முதல்நிலைக் காவலா் அறிவுமணி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் புதுவை மாநிலத்திலிருந்து மதுப்புட்டிகள் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, பைக்கில் வந்தவரை மயிலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த க.செல்வா (47) என்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து, 237 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.
பாராட்டு: மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்ட சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மூவரையும் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.