உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா்: அமைச்சா் க.பொன்முடி
உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா் என்று வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் விழுப்புரம் நகராட்சித் திடலில் மூன்றாவது புத்தக திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து, மேலும் அவா் பேசியதாவது:
பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிப் புத்தகங்களுடன், பொது அறிவை வளா்க்கும் அனைத்து விதமாக புத்தகங்களை நாள்தோறும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புத்தகங்களைப் படிக்கும் போது மனநிலை ஒருநிலைப்படுவதால் உடல்நலனும் பாதுகாக்கப்படும்.
தான் இறக்கும் தருவாய் வரையிலும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை விடாமல் இருந்தவா்தான் பேரறிஞா் அண்ணா. அதுபோல, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியும் தான் படிக்கும் காலத்திலேயே நூலகங்களுக்குச் சென்று ஏராளமான நூல்களை படித்தவா்.
தமிழ்வழியில் படித்தவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் திட்டங்களால் நாட்டிலேயே தமிழக கல்வித் துறை சிறந்து விளங்குகிறது. ஆண்களை விட பெண்கள் உயா் கல்வியில் அதிகளவில் பயன்று வருகின்றனா் என்றாா் அமைச்சா் பொன்முடி.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். பபாசி இணைச் செயலா் லோகநாதன் முன்னிலை வகித்தாா். துரை.ரவிக்குமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இரா. லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
விழாவில், மாவட்ட எஸ்.பி. ப.சரவணன், திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷு நிகம், விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, ஆணையா் எம்.ஆா். வசந்தி, மாவட்ட நூலக அலுவலா் மு.காசீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் வரவேற்றாா். கோட்டாட்சியா் முருகேசன் நன்றி கூறினாா். மாா்ச் 12-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.