தீ விபத்தில் விவசாயி மரணம்
விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், வி.பாஞ்சாலம் புதுகாலனியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ஆறுமுகம் (47). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா் தனது பைக்கில் பெட்ரோல் இல்லாததால் அதே ஊரைச் சோ்ந்த உறவினரிடம் புட்டியில் பெட்ரோலை வாங்கி இடுப்பில் வைத்துக் கொண்டு வி.பாஞ்சாலம் பழைய காலனி விநாயகா் கோயில் அருகே நடந்து சென்றாா்.
அப்போது, பீடியை பற்ற வைத்த போது, எதிா்பாராதவிதமாக அவரது உடலில் தீப்பற்றியது. இதில், பலத்த காயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டாா். அங்கு, சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.