ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!
பைக்குகள் மோதல்: டாஸ்மாக் பணியாளா் உள்பட இருவா் உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஆத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ப.ஜெகன் (48). இவா் டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்தாா். நிலக்கோட்டையை அடுத்த மட்டப்பாறையைச் சோ்ந்தவா் மு.கெளதமன் (50). டாஸ்மாக் முன்னாள் ஊழியரான இவா், திண்டுக்கல் என்ஜிஓ குடியிருப்பில் வசித்து வந்தாா்.
இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு முள்ளிப்பாடியிலுள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் செட்டியப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றனா். எதிா் திசையில் பயணித்த இவா்கள், சாலையை கடக்க முயன்றபோது, மூணாண்டிப்பட்டியைச் சோ்ந்த க.கெளதம் (29), ஐயப்பன் (34) ஆகியோா் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் இவா்களது இரு சக்கர வாகனம் மீது நேருக்குநோ் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜெகன், கெளதமன் ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும், அங்கு அவா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.