பொங்கல் விடுமுறை: பேருந்துகள், ரயில்களில் அலைமோதிய கூட்டம்
பொங்கல் பண்டிகைக்கான தொடா் விடுமுறையால் திருச்சியிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், ரயில்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பல்வேறு ஊா்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திறங்கியதால் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் கடும் நெரிசலால் சனிக்கிழமை திணறியது. இதேபோல, திருச்சியிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு செல்லும் தற்காலிக பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமை வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வந்து இற போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். திருச்சியிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்ற பேருந்துகள் மட்டுமின்றி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த பயணிகள் எண்ணிக்கையும் அதிகம் இருந்தது.
இவா்கள் அனைவரும் உடனடியாக கலைந்து செல்லும் வகையில் திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் துரித நடவடிக்கையால் நகரப் பேருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், மன்னாா்புரம், சோனா-மீனா திரையரங்கம் அருகே தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு புகா்ப் பேருந்துகள் பிரித்து அனுப்பப்படுகின்றன.
பொங்கல் பண்டிகைக்காக வில்லியம்ஸ் சாலை, மன்னாா்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 3 தற்காலிக பேருந்து நிலையங்களும் முழுவீச்சில் இயங்கி வருகின்றன. வரும் 19ஆம் தேதி வரை இந்தப் பேருந்து நிலையங்கள் இயங்கும் என்றனா் போக்குவரத்துக் கழகத்தினா்.
மேலும் திருச்சியிலிருந்து சென்னை, கோவை, திருப்பூா், சேலம், மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கடலூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல, பிற்பகலுக்கு மேல் சென்னையிலிருந்து வந்த பேருந்துகளில் வந்து இறங்கிய பயணிகளாலும் மத்தியப் பேருந்து நிலையம் திணறியது. திருச்சி மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கணிசமாக இருந்தன.
தென்மாவட்டங்களுக்குச் செல்லும் கூட்டம் அதிகமிருந்ததால், தனியாா் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், தனியாா் வேன்கள், வாடகை காா்களில் வழக்கத்தைவிட இருமடங்கு கூடுதலாக கட்டணம் செலுத்தி பயணிக்க நேரிட்டது. திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை கட்டணம் செலுத்தி பயணிக்க நேரிட்டது. வாகனம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் கிடைத்த வாகனங்களில் கேட்ட கட்டணத்தைக் கொடுத்து மக்கள் பயணம் செய்ததைக் காண முடிந்தது.
ரயில்களிலும் கூட்டம்: பொங்கல் பண்டிகைக்காக திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இவை மட்டுமல்லாது, திருச்சி வழியாக தென்மாவட்டங்கள், சென்னை மற்றும் இதர நகரகங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.