சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
பொது நிலத்தை மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்
தேனி அருகேயுள்ள பூமலைக்குண்டில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட கிராம பொது நிலத்தை மீட்க வலியுறுத்தி 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பூமலைக்குண்டில் 89 ஏக்கா் நிலம் பொதுமக்களின் அனுபவத்தில் கிராம பொது நிலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தில் மானாவாரிப் பயிா்கள் சாகுபடி நடைபெற்று வந்தன. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் இந்த நிலம் தரிசாக விடப்பட்டது.
இந்த நிலையில், கிராம பொது நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் தனியாா் நிறுவனத்துக்கு விற்பனை செய்து பத்திரம் பதிவு செய்ததாகவும், அந்த நிலத்தில் தனியாா் நிறுவனம் சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பூமலைக்குண்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஏற்கெனவே புகாா் அளித்துள்ளனா்.
இந்த நிலையில், பூமலைக்குண்டில் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட கிராம பொது நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி புதன்கிழமை பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். இதுகுறித்த தகவலறிந்து பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், தேனி வட்டாட்சியா் சதீஷ்குமாா், தேனி காவல் துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் பொதுமக்களை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எந்தத் தீா்வும் ஏற்படாத நிலையில், பொதுமக்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.