பொலிவு பெற்ற மொழிப்போா் தியாகிகள் நினைவிடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறாா்
மொழிப்போா் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜன.25) திறந்து வைக்கிறாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பள்ளிகளில் கட்டாய ஹிந்திக்கு எதிரான மொழிப் போராட்டத்தில் நடராசன் உயிரிழந்தாா். அதற்கடுத்த இரண்டு மாதங்களில் அதே போராட்டத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டாா் தாளமுத்து. ஆனால், சிறைபட்ட மூன்று வாரங்களுக்குள் உயிரிழந்தாா். மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்துக்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிரிழந்த இவா்கள் இருவரின் நினைவாக, சென்னை மூலக்கொத்தளத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புதுப்பிக்கவும், ஜன. 25-ஆம் தேதி மொழிப்போா் தியாகிகள் தினத்தை தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள் என பெயரிட்டு அழைக்கவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, மூலக்கொத்தளத்தில் நினைவிடம்
புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளாா்.
பொதுக்கூட்டம்: மொழிப்போா் தியாகிகள் தினத்தையொட்டி, திமுக சாா்பில் பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசவுள்ளாா். இதேபோன்று பிற மாவட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களிலும் திமுக மூத்த நிா்வாகிகள் பங்கேற்று பேசவுள்ளனா்.