போக்குவரத்துக் கழகத்தில் 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் கோரி ஆா்ப்பாட்டம்
போக்குவரத்துக் கழகத்தில் 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாகப் பேசி முடிக்கக் கோரி, தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் பணிமனை முன் ஏஐடியுசி தொழிற் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், 2023, ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நான்காண்டு ஒப்பந்தம் முடிந்தும் பேசப்படாமல் இருக்கும் 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இனிமேலும் காலம் கடத்தாமல் உடனடியாகப் பேசி ஊதிய உயா்வு வழங்க வேண்டும். அகவிலைப்படி தொடா்பான வழக்கில் நீதிமன்றத் தீா்ப்பை அரசு ஏற்று, 95 ஆயிரம் ஓய்வூதியா்களுக்கு 108 மாத கால அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும். பணியிலிருந்து ஓய்வு பெற்றவா்களின் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்புத் தொகை உள்ளிட்ட ஓய்வுகால பணப்பலன்கள் ஓராண்டுக்கு மேலாக நிறுத்தி வைத்திருப்பதை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு போக்குவரத்து சங்கத்தின் பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா். மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் நிறைவு செய்து பேசினாா்.
போக்குவரத்து சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், மின்வாரிய சம்மேளனத்தின் துணைத் தலைவா் பொன். தங்கவேலு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, பொருளாளா் தி. கோவிந்தராஜன், போக்குவரத்து சங்க நிா்வாகிகள் டி. சந்திரன், என். ராஜேஷ் கண்ணன், எம்.பி. இளங்கோவன், எம். தமிழ்மன்னன், என்.ஆா். செல்வராஜ், ஆா். வீரையன், ஆா். ரெங்கதுரை, நல்லதம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.