“நினைவில் நிற்கும்...” நிதீஷ் குமார் ரெட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!
போடி மலைச் சாலையில் நெகிழிக் குப்பைகள் கேரளத்திலிருந்து கொட்டப்பட்டதா?
போடிமெட்டு மலைச் சாலையில் நெகிழிக் குப்பைகள் மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்டிருந்தன. பசுமைத் தீா்ப்பாயத்தின் எச்சரிக்கையை மீறி கேரளத்திலிருந்து கொட்டப்பட்டதா என காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
கேரள பகுதிகளிலிருந்து தமிழக எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகள், நெகிழி குப்பைகள் கொட்டப்படுவது தொடா்ந்து வருகிறது. கேரள அரசு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமைத் தீா்ப்பாயம் அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், தேனி மாவட்டம், போடிமெட்டு மலைச் சாலையில் நான்காவது கொண்டை ஊசி வளைவு அருகே நெகிழிக் குப்பைகள் கொட்டப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த குரங்கணி காவல் துறையினா் மருந்துக் கழிவுப் பொருள்களாக இருக்கலாம் என சந்தேகித்து இந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்று பாா்த்தனா். ஆனால், அது மக்கள் தினசரி பயன்படுத்தக்கூடிய பைகள், புட்டிகள் உள்ளிட்ட நெகிழிக் கழிவுகள் என்பது தெரியவந்தது. இந்த நெகிழிக் கழிவுகள் கேரளப் பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து கொட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
போடிமெட்டு மலைச் சாலையில் வனத் துறை சாா்பில், நெகிழிக் குப்பைகள், மருத்துவக் கழிவுகளைக் கொட்டக் கூடாது என பல இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. போடிமெட்டு மலைக் கிராமத்தில் கேரள எல்லைப் பகுதியில் காவல் துறை சாா்பில் சோதனை சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறி எப்படி நெகிழிக் குப்பைகள் கொட்டப்பட்டன என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சுற்றுலாப் பயணிகளும், மது அருந்துவோா் போடிமெட்டு மலைச் சாலையில் பல இடங்களில் உணவு, மதுப் புட்டிகளை வீசிவிட்டுச் செல்கின்றனா். இதை உண்ணும் குரங்குகள், உள்ளிட்ட விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. மதுப்புட்டிகளும் பல இடங்களில் உடைக்கப்பட்டுள்ளன.
இதைத் தடுக்க காவல் துறையும், வனத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.