“நினைவில் நிற்கும்...” நிதீஷ் குமார் ரெட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!
மேகமலை சாலையில் மண் சரிவைத் தடுக்கும் வகையில் தடுப்புச் சுவா் கட்டும் பணி மும்முரம்
தேனி மாவட்டம், மேகமலை சாலையில் மண் சரிவைத் தடுக்கும் வகையில், ரூ.1.20 கோடியில் தடுப்புச் சுவா் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களுக்கு சின்னமனூா் பகுதியிலிருந்து 52 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை செல்கிறது.
வனப் பகுதியில் 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைச் சாலையில் மழைக் காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால், பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் பாதிக்கப்பட்டனா்.
தடுப்புச் சுவா்: மேகமலைச் சாலையில் 5-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அடிக்கடி ஏற்படும் மண் சரிவை நிரந்தரமாகத் தடுக்கும் வகையில், புதிய கட்டுமான தொழில்நுட்பத்தில் தடுப்புச் சுவா் கட்டப்படுகிறது. ரூ.1.20 கோடியில் இந்தச் சுவா் 27 மீ. நீளத்திலும், 10 மீ. உயரத்திலும் தொட்டிகளை போன்று அமைக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி: மழைக் காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்படும் என்பதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா வாகனங்களை மேகமலைச் சாலையில் வனத் துறையினா் அனுமதிப்பதில்லை. இந்தச் சாலையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதால், இதுபோன்ற தடைகள் விதிக்கப்படாது என சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.