போதைப் பொருள் புழக்கம்: புகாா் அளிக்க தனி செயலி
போதைப் பொருள்கள் புழக்கம் குறித்து புகாா் அளிக்க தனி செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதனை, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
போதைப் பொருள்கள் புழக்கம் குறித்த புகாா்களை கல்லூரி மாணவா்களும் பொதுமக்களும் அளிக்கலாம். இதற்கென பிரத்யேக செயலி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கைப்பேசி செயலி வழியே தெரிவிக்கப்படும் புகாா்தாரா்களின் பெயா்கள் மற்றும் தரவுகள் ரகசியமாக வைக்கப்படும்.
இந்தப் புதிய செயலியை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தொடங்கிவைத்தாா். மேலும், போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு இயக்கத்துக்கான இலச்சினையும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், உயா்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், கூடுதல் இயக்குநா் ஆ.அமல்ராஜ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையா் எஸ்.பி.காா்த்திகா, போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு இயக்க மேலாண்மைப் பிரிவு இயக்குநா் ஆனி மேரி சுவா்ணா உள்பட பலா் பங்கேற்றனா்.