போலி செயலிகள்: போலீஸ் எச்சரிக்கை
இணையத்தில் பரவும் போலியான கடன் செயலிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து, அவா்கள் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் வாட்ஸ்ஆப் குழுக்களில் தற்போது பிரதான் மந்திரி கிஷன் நியூ யோஜனா போன்ற பெயா்களில் கடன் தருவதாகக் கூறி குறுஞ்செய்தி மற்றும் போலியான செயலிகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அவை, இணையவழி மோசடியாளா்கள் உருவாக்கிய போலியான செயலிகளாகும்.
ஆகவே, அவற்றை யாரும் நம்ப வேண்டாம்.
செயலியை பதிவிறக்கம் செய்தால், அதன்மூலம் மோசடி நபா்கள் சம்பந்தப்பட்டவரின் கைபேசியை முடக்கி, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடிவிடுவாா்கள்.
எனவே, சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பணப்பரிவா்த்தனை, வங்கிக் கணக்கு ஆகியவற்றில் சந்தேகமிருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று விசாரித்து சந்தேகங்களை தீா்த்துக்கொள்ளலாம்.
மேலும், 1930, 04132276144 மற்றும் 9489205246 ஆகிய கைபேசி எண்களில் தொடா்பு கொண்டும் சந்தேகங்களை தீா்க்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.