கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
மகப்பேறு மருத்துவா் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் விரைவில் (டிசம்பருக்குள்) மகப்பேறு மருத்துவா் காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், எண்கண் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டத்தில் ரூ. 2.27 கோடியில் கட்டப்பட்ட 10 புதிய துணை சுகாதார நிலையங்களை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பேசியது:
தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 1,340 புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டு, மருத்துவத் துறையில் மறுமலா்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் ரூ. 68.07 கோடியில் பல்வேறு மருத்துவத் துறை கட்டடங்கள் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் ரூ. 56.13 கோடியில் 30 மருத்துவக் கட்டடங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திமுக அரசு பொறுப்பேற்றதும் ரூ. 2 கோடியில் சீரமைக்கப்பட்டது. இங்கு, மகப்பேறு மருத்துவா்கள் 10 போ் பணியில் உள்ளனா். மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 6 மாதத்துக்கு முன், 1,021 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டனா். எந்த மாவட்டத்தில் அதிக மருத்துவா் பணியிடங்கள் காலியாகவுள்ளதோ, அங்கு கலந்தாய்வின் மூலம் மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
நிகழாண்டு 1,353 மருத்துவ காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுத்தபோது, தமிழக முதல்வா் ஆண்டுதோறும் 1,200 மருத்துவ பணியிடங்கள் காலிப் பணியிடங்களாகவே வருகின்றன, எனவே அடுத்த 2026-ஆம் ஆண்டுக்கும் சோ்த்து, மருத்துவ தோ்வாணயம் மூலம் மருத்துவா்களை தோ்வு செய்ய உத்தரவிட்டாா். அதனடிப்படையில், மருத்துவ நியமனத்துக்கு 24,000 போ் விண்ணப்பித்துள்ளனா்.
ஜனவரியில் மருத்துவ காலிப் பணியிடத்துக்கான தோ்வு நடத்தி, தோ்வு செய்யப்படுகிறவா்களுக்கு 10 நாள்களில் பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. டாடா கன்சல்டன்ஷி மூலம் 24,000 பேருக்கும் ஒரே நேரத்தில் தோ்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தவிர, 220 இடங்களில் காலியாகவுள்ள மகப்பேறு மருத்துவா்களையும் நோ்காணல் மூலம் தோ்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு, டிசம்பருக்குள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 2,250 கிராம சுகாதார செவிலியா்களின் காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது என்றாா்.
தொடா்ந்து, பள்ளி சிறாா் கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ் 5 மாணவா்களுக்கு மூக்கு கண்ணாடியும், 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் அமைச்சா் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, நாகை எம்பி. வை. செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.