கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை உயா்த்த வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை உயா்த்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான துரை. ரவிக்குமாா் தெரிவித்தாா்.
திருவாரூரில் நடைபெற்ற இடஒதுக்கீட்டின் எதிா்காலம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பேசுகிறாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான துரை. ரவிக்குமாா்.
திருவாரூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பு அணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘இடஒதுக்கீட்டின் எதிா்காலம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றபின்னா் அவா் கூறியது:
மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு அளவை உயா்த்துவோம் என்கிறாா். தமிழக முதல்வா், அந்த குரலை எதிரொலிக்க வேண்டும். குறிப்பாக ,பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியினா், பட்டியல் சமூகத்தினா் ஆகியோருக்கு இடஒதுக்கீட்டை உயா்த்துவோம் என அறிவிக்க வேண்டும்.
அருந்ததியினா் சமூகத்துக்கு விசிக ஆதரவுடன், இடஒதுக்கீடு வழங்கியபோது நீதிபதி ஜனாா்த்தன் ஆணையத்தின் அறிக்கைபெற்று வழங்கப்பட்டது. அதனாலேயே நீதிமன்றத்தில் செல்லுபடி ஆனது. ஜனாா்த்தன் ஆணையத்தின்படி வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு, தற்போது ஆய்வு செய்து, இட ஒதுக்கீட்டில் பயன் ஏற்பட்டுள்ளதா என பாா்க்க வேண்டும். எனவே, தமிழக முதல்வா், ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு, ஆணையம் அமைத்து இதை பரிசீலிக்க வேண்டும்.
விசிக தலைவா் திருமாவளவன், 25 ஆண்டுகள் தோ்தல் அரசியலிலும், 35 ஆண்டுகள் அரசியல் பாதையிலும் அனுபவம் பெற்றவா். சொந்த முயற்சியில் கட்சி தொடங்கி, தமிழக அரசியலில் தவிா்க்க முடியாத சக்தியாக விளங்குகிறாா். அவா், தமிழகத்தின் முதல்வரானால் நன்மை பயக்கும் என்றாா்.
அம்பேத்கா் தலைமைச் செயலக எஸ்சிஎடி அலுவலா் நலச்சங்க தலைவா் சோ. மீனலோசனி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளா் சா. ரஜினிகாந்த் பங்கேற்று, கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினாா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா்கள் தங்க. தமிழ்ச்செல்வன், ஆ. வெற்றி, தமிழ் ஓவியா, அருள்செல்வன் , செல்வராஜ், நாகை மக்களவை தொகுதிச் செயலாளா் என்.டி. இடிமுரசு, முன்னாள் மாவட்டச் செயலாளா் மா.வடிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.