சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
மகளிா் உரிமைத் தொகை கோரி 13,699 போ் மனு: அமைச்சா் அர.சக்கரபாணி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் இதுவரை 13,699 போ் மகளிா் உரிமைத் தொகை கோரி மனு அளித்துள்ளதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையத்தில் இருந்து 9 வழித்தடங்களில் புதிதாக பேருந்து சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ச.தினேஷ் குமாா், எம்எல்ஏ-க்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஓய்.பிரகாஷ் (ஒசூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேருந்து சேவையை கொடியசைத்து அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தாா்.
அதைத் தொடா்ந்து, கட்டிகானப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பாா்வையிட்டாா். அதன்பிறகு காவேரிப்பட்டணம் பேரூராட்சி சந்தையில் ரூ. 53 லட்சத்தில் தினசரி சந்தை கட்டடம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.20 லட்சத்தில் கூடுதல் கட்டுமான பணிகளைத் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 42 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மொத்தம் 32,133 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் மகளிா் உரிமைத்தொகை கோரி 13,699 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முகாம் நடைபெறும் நாளிலே 308 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று விண்ணப்பத்தை பெற்று, உரிய ஆவணங்களுடன் நிறைவுசெய்து அளிக்கலாம். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மட்டுமே மகளிா் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். ‘உங்களூடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்கட்டமாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை 78 முகாம்கள் நடைபெறுகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் கவிதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துறை ஆட்சியா் தனஞ்செழியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளா் செல்வம், நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், முன்னாள் எம்எல்ஏ முருகன், திமுக வா்த்தக அணி மாநில துணை செயலாளா்கள் கேவிஎஸ் சீனிவாசன், அன்பரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
படவிளக்கம் (31கேஜிபி2):கிருஷ்ணகிரியில்
புதிய பேருந்து சேவையை தொடங்கிவைத்த அமைச்சா் அர.சக்கரபாணி. உடன், ஆட்சியா் ச.தினேஷ் குமாா் உள்ளிட்டோா்.