மகளிா் கலைக் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்
திருவண்ணாமலை கம்பன் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில், ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் சீதாலட்சுமி தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் மகாலட்சுமி முன்னிலை வகித்தாா்.
சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞரும், பெட்காட் நுகா்வோா் அமைப்பின் மண்டலச் செயலருமான பி.கே.தனஞ்செயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
காற்று, நீா், நிலம் ஆகியவற்றை மாசுபடாமல் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளை உணா்ந்து நாம் செயல்பட வேண்டும்.
வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1974, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆகியவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். சமூக மாற்றத்துக்கான சுற்றுச்சூழல் மேம்பாடுகளை மேற்கொள்வதில் நாம் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மாணவிகளிடையே ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை என்ற தலைப்பில் விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், கல்லூரி துறைத் தலைவா்கள் மகேஸ்வரி, ராஜலட்சுமி, சங்கீதா மற்றும் ஸ்ரீசெல்வா, அக்ஷயா மற்றும் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.