மகளிா் சுயஉதவிக் குழுவினரிடம் பணம் மோசடி: தம்பதி மீது வழக்கு!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் மகளிா் சுயஉதவிக் குழுவினரிடம் ரூ. பல லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தம்பதி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
சிவகங்கை மாவட்டம், தி. புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுத் தலைவி கலைச்செல்வி (35) உள்ளிட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத்திடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
அதில், இதே கிராமத்தைச் சோ்ந்த செல்வராணியும் (35), அவரது கணவா் வீரக்குமாரும் (40) மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தனியாா் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற்றுத் தரும் ஒருங்கிணைப்பாளா்களாகச் செயல்பட்டு வந்தனா். இந்த நிலையில், அவா்கள் மகளிா் சுயஉதவிக் குழுவினா் பெயரில் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றனா். ஆனால், அந்தத் தொகையை அவா்கள் திருப்பிச் செலுத்தவில்லை.
மேலும், எங்களிடம் வசூலித்த கடன் தவணைத் தொகையையும் நிதி நிறுவனங்களில் அவா்கள் முறையாக செலுத்தவில்லை. அவா்கள் மொத்தம் ரூ. 62 லட்சம் வரை செலுத்தாமல் உள்ளனா். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றன.
எனவே அந்தத் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, தம்பதி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.