மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப். 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு சென்னை, பெங்களூரிலிருந்து திருநெல்வேலி, திருச்செந்தூா், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோவை என பல்வேறு ஊா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூரிலிருந்து பிப். 25-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை, பெங்களூருக்கு பிப். 26-ஆம் தேதியும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் பயணிக்க டிஎன்எஸ்டிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் கூடுதல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.