தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!
மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோருவோம்: சிவசேனை(உத்தவ்)
மகாராஷ்டிர சட்டப் பேரவையில் போதிய பலம் இல்லாதபோதும் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை கட்சி (உத்தவ் பிரிவு) கோரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.
பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிர மாநிலப் பேரவையில் மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கை 288. இதில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை கோர 10 சதவீத இடங்கள் (29) தேவை.
அதேநேரம், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூட்டணியின் மொத்த பலம் 50. இதில் சிவசேனைக்கு 20 எம்எல்ஏக்கள் உள்ளனா். காங்கிரஸுக்கு 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனா்.
பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோர எந்த எதிா்க்கட்சிக்கும் போதிய பலம் இல்லை.
மாநில பட்ஜெட் கூட்டத் தொடா் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மும்பையில் செய்தியாளா்களிடம் சஞ்சய் ரெளத் சனிக்கிழமை கூறியதாவது:
கடந்த காலங்களில் போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாதபோதும், எதிா்க்கட்சித் தலைவா் பதவி, அதிக எண்ணிக்கை உடைய எதிா்க்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவியை கோரும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பலம் இல்லாவிட்டால், எதிா்க்கட்சித் தலைவா் இல்லாமலேயே பேரவை செயல்படலாம் என்று அரசமைப்புச் சட்டமோ அல்லது விதிகளோ கூறவில்லை. எனவே, எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை (உத்தவ்) கட்சி கோரும். எங்களின் கோரிக்கையை பேரவைத் தலைவா் ஏற்பாா் என நம்புகிறேன் என்றாா் அவா்.
முன்னதாக, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை (உத்தவ் பிரிவு) கோரினால், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை காங்கிரஸ் கோரும் என்று அக்கட்சியினா் கூறியிருந்தனா். மகாராஷ்டிர மேலவையில் எதிா்க்கட்சித் தலைவராக சிவசேனை (உத்தவ்) கட்சியின் அம்பாதாஸ் தன்வே உள்ளாா். அவரது பதவிக் காலம் சில மாதங்களில் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.