‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்
கடலூா் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் ரூ.5.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் புதன்கிழமை வழங்கினாா்.
மங்களூா் ஊராட்சி ஒன்றியம், போத்திரமங்கலம், எழுத்தூா், கழுதூா், சிறுப்பாக்கம், மா.புடையூா் ஆகிய இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட 3-ஆம் கட்ட சிறப்பு முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமை வகித்து, 1,072 பயனாளிகளுக்கு ரூ.5.20 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:
ஆதிதிராவிடா்கள் தொழில் தொடங்க தாட்கோ மூலம் ரூ.ஒரு கோடி வரை மானியத்தொகையுடன் கூடிய கடனுதவி, விவசாய நிலமில்லா விவசாயிகள் சொந்தமாக விவசாயம் நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. தொழிலாளா் நலத்துறை உறுப்பினா்களுக்கு திருமணம், கல்வி, மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுகிறது.
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களை சென்றடையும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ சிறப்புத் திட்டம், ஊரகப் பகுதிகளில் 3-ஆம் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் முகாம்களில் கலந்துகொண்டு மனுக்கள் அளித்து பயன்பெறலாம். முகாம்களில் பெறப்படும் மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
முகாமில், ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் ரமேஷ், வருவாய்க் கோட்டாட்சியா் சையத் முகமது, மாற்றுத்திறனாளி நல அலுவலா் பாபு, தாட்கோ மேலாளா் லோகநாதன் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.