வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!
மக்களை ஏமாற்றும் சென்னை மாநகராட்சி - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
சுண்ணாம்பு கொளத்தூரில் மின்வயர் கேபிள்கள் சரிசெய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி எடிட் செய்த புகைப்படம் வெளியிட்டதற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,
சாலையில் ஆபத்தான முறையில் கிடக்கும் மின்சார கேபிள்கள் பற்றி புகைப்படத்துடன் புகாரளித்தால், அவற்றை அப்புறப்படுத்தாமல், புகைப்படத்திலுள்ள வாகனங்களை மட்டும் ஏஐ உதவியுடன் அகற்றிவிட்டு, பிரச்சனை சரி செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி பதிவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
உயிரையே பறிக்கவல்ல மின்சார கேபிள்களைப் பற்றிய தகவல் அறிந்ததும் அதனை அகற்றுவதைவிட்டு புகைப்படங்களை எடிட் செய்வதில் மட்டும் அக்கறை காட்டியிருப்பது மக்கள் நலனில் திமுக அரசு கொண்டுள்ள அலட்சியப்போக்கையே சுட்டிக் காட்டுகிறது.
மக்களை ஏமாற்றி உயிருடன் விளையாடுவது தான் திராவிட மாடலா? இந்த முறை ஏஐ தொழில்நுட்பம் தவறு செய்ததால் மட்டுமே திமுக அரசின் தவறு வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இதுவரை எத்தனை புகார்கள் களையப்பட்டது போல புனையப்பட்டன? எத்தனை தவறுகள் மறைக்கப்பட்டன? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் எழுகின்றன.
ஒருபுறம் பணிகளைத் துறந்து விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் முதல்வர் ஸ்டாலின், மறுபுறம் புகாரைச் சரிசெய்வதை விடுத்து, புகைப்படங்களை மட்டும் மாற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியா? எளியோரை எள்ளிநகையாடி, ஏஐ உதவியுடன் ஏமாற்றி, மீண்டுமொரு முறை கோட்டையில் கொடியை ஏற்றலாம் என்ற எண்ணத்துடன் உழன்று வரும் திமுக அரசு, பகல் கனவு களைந்து ஏமாற்றமடைந்து, தமிழகத்தில் இருந்து தூக்கியெறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உள்ள சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் திறந்தவெளியில் மின்சார கேபிள்கள் தொங்குவதாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கும் கேபிள்களை சரிசெய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சியிடம் ஒருவர் சமூக ஊடகம் வாயிலாக புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, புகார் தெரிவிக்கப்பட்ட இடத்தில் மின் கேபிள்கள் சரிசெய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி, சரிசெய்யப்பட்டதாக ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்தது.
ஆனால், சென்னை மாநகராட்சி பகிர்ந்த புகைப்படமானது, எடிட் செய்யப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகார் தெரிவிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று, புகார் உண்மையானதா? கேபிள்கள் ஏதேனும் அச்சுறுத்தும்வகையில் தொங்குகிறதா? என்று ஆய்வுகூட செய்யாமல், எடிட் செய்து படத்தை வெளியிடுவதாக சென்னை மாநகராட்சி மீது புகார்களும் எழுந்தன.