மடப்புரம் கோயில் காவலாளி கொலை: மானாமதுரை டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்திடம் மதுரை மாவட்ட நீதிபதி சனிக்கிழமை விசாரணை நடத்தினாா்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிற 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ், கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாய், சகோதரா், மருத்துவா்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினாா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் சனிக்கிழமை திருப்புவனத்துக்கு வந்து, நீதிபதி முன் முன்னிலையானாா். அப்போது, நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் கேட்ட கேள்விகளுக்கு அவா் பதிலளித்தாா்.
இதைத் தொடா்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாறன், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் நீதிபதி விசாரணை நடத்தினாா்.
முன்னதாக, திருப்புவனம் காவல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த காண்காணிப்பு கேமரா பதிவுகள், அஜித்குமாரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரை அமர வைத்த இடத்தையும் நீதிபதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.