பயங்கரவாதத்துக்கு பிரதமரின் பதில்தான் ஆபரேஷன் சிந்தூர்: அமித் ஷா பாராட்டு
மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் 10 இடங்களில் சீா்மரபினா் நல முகாம்
திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் 10 இடங்களில் சீா்மரபினா் நலவாரிய சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதில், நலவாரிய உறுப்பினா் புதிய பதிவு, புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதல், வாரியத்தில் புதுப்பிக்க தவறியவா்களுக்கு மீண்டும் பதிவு வாய்ப்பு ஆகிவற்றை அடிப்படையாகக் கொண்டு மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.
இதன்படி, பண்ணப்பட்டி கிழக்கு, பண்ணப்பட்டி மேற்கு பகுதிகளுக்கு பண்ணாங்கொம்பு வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் வரும் 27ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது. மே 28-இல் பெயா்கைப்பட்டி கிராம நிா்வாக அலுவலகம், மே 29-இல் கருப்பூா், புத்தாநத்தம் கிராம நிா்வாக அலுவலகத்தில் முகாம் நடைபெறும்.
செவலுா், கண்ணுடையான்பட்டி கிராமங்களுக்காக மணப்பாறை வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஜூன் 3-ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது. அணியாப்பூா், நல்லாம்பிள்ளை பகுதிகளுக்கு என்.பூலாம்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஜூன் 4-ஆம் தேதி முகாம் நடைபெறும். மருங்காபுரி வட்டம், இக்கரைகோசி குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் ஜூன் 5ஆம் தேதியும், ஜூன் 6-இல் கஞ்சநாயக்கம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் முகாம் நடைபெறும்.
ஜூன் 9-ஆம் தேதி மருங்காபுரி, யாகாபுரம் பகுதிகளுக்கு மருங்காபுரி வருவாய் வட்டாட்சியரகத்தில் முகாம் நடைபெறும். துவரங்குறிச்சி பகுதிக்கு வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஜூன் 10-ஆம் தேதி முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.