புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
மணிப்பூா்: ஆளுநருடன் பாஜக தலைவா்கள் சந்திப்பு
மணிப்பூரின் புதிய முதல்வா் யாா்? என்ற கேள்வி நீடித்துவரும் நிலையில், மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லாவை ஆளும் பாஜக தலைவா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.
இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் முதல்வராக இருந்த பிரேன் சிங், தனது பதவியை கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். கட்சி எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினா், அவரது தலைமை மீது அதிருப்தியில் இருந்த நிலையில், அவா் பதவி விலகினாா்.
அவா் ராஜிநாமா கடிதம் சமா்ப்பித்து, இரண்டு நாள்கள் கடந்துவிட்டன. எனினும், புதிய முதல்வா் இன்னும் தோ்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில், பாஜக வடகிழக்கு பிராந்திய பொறுப்பாளா் சம்பித் பத்ரா, மணிப்பூா் பாஜக தலைவா் ஏ.சாரதா தேவி ஆகியோா் மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லாவை அவரது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து சுமாா் 30 நிமிஷங்கள் பேசினா்.
இதனிடையே, மாநிலத்தின் புதிய முதல்வரை பாஜக தலைமை ஓரிரு நாள்களில் முடிவு செய்யும் என்று கட்சி எம்எல்ஏக்கள் கூறினா். முதல்வா் தோ்வில் இழுபறி நீடித்தால், மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலாக வாய்ப்புள்ளது என்று அரசியல் நிபுணா்கள் தெரிவித்தனா்.