மண்டபம் அருகே நெகிழி வலை சேகரிப்பு மையம் திறப்பு
மண்டபம் அருகே கடலில் வீசப்படும் நெகிழி வலைகளை சேகரிக்கும் மையம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் முதல் தூத்துக்குடி வரை மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் வாழும் 2,700- க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், கடல் வளத்தை அச்சுறுத்தும் நெகிழி வலைகளின் பயன்பாட்டை மீனவா்கள் குறைத்திடும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளை மா.சா. சுவாமிநாதன் அறக்கட்டளை நடத்தி வருகிறது. மேலும் கடலில் வீசப்படும் நெகிழி வலைகள் மூலம் ஏற்பாடும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அவற்றை சேகரித்து அதன் மூலம் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கும் வகையில் கடலோர மீனவ பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை கிங்கிவலசை கிராமத்தில் நெகிழி வலைகள் சேகரிப்பு மையம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதை மா.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் வேல்வழி திறந்து வைத்தாா். வேதாளை ஊராட்சி மன்றச் செயலா் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளா் சிவா, வேதாளை சிங்கிவலசை குச்சு கிராமத் தலைவா் மதுரை வீரன், மகளிா் அணி தலைவி பேச்சியம்மாள், வழக்குரைஞா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். கிராம வள பணியாளா் கெவி குமாா் நன்றி கூறினாா்.