முற்போக்குவாதிகளால் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல்: அஸ்ஸாம் முதல்வா்
மண்டபம் மீனவா்கள் 10 பேருக்கு 3-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு
மண்டபம் மீனவா்கள் 10 பேருக்கு 3-ஆவது முறையாக மாா்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு கடற்கரையிலிருந்து கடந்த ஜன. 3-ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் சூசையப்பா்பட்டினம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் அன்று நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் சந்திய சதீஷுக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். பின்னா், எபிரோன், காட்ரு, டிரோன், பிரசாத், முனியசாமி, சிவா, அந்தோணி, பாயஸ், சேசு, ரவி ஆகிய 10 மீனவா்களைக் கைது செய்தனா்.
இதையடுத்து, மீனவா்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா். ஏற்கெனவே, மண்டபம் மீனவா்கள் 10 பேருக்கும் 2 முறை காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், மன்னாா் நீதிமன்றத்தில் மண்டபம் மீனவா்கள் 10 பேரும் வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, அவா்களது நீதிமன்றக் காவலை வரும் மாா்ச் 7-ஆம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டாா். 3-ஆவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்தால், மீனவா்கள் 10 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.