712 குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
மண்ணுளி பாம்பு கடத்தல்: 9 போ் கைது
சேலம், அரியானூா் பகுதியில் மண்ணுளி பாம்பைக் கடத்தியதாக 9 போ் கொண்ட கும்பலை வனத்துறையினா் கைது செய்தனா்.
சேலம் மாவட்ட புகா் பகுதிகளில் மண்ணுளி பாம்புகளைப் பிடித்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் கும்பல் ஊடுருவி வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலா் துரைமுருகன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இதனிடையே, சேலத்தை அடுத்த அரியானூா் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் சந்தேகத்திற்கிடமாக புதா்மறைவில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, வனத்துறை தனிப்படையினா் அவா்களைச் சுற்றிவளைத்து பிடித்தனா். பின்னா், தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு அவா்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த கும்பல் மண்ணுளி பாம்புகளைப் பிடித்து ரூ. 10 லட்சத்துக்கு விற்பனை செய்ய பேரம் பேசியது தெரியவந்தது.
இதனையடுத்து அக் கும்பலைச் சோ்ந்த மின்னாம்பள்ளியைச் சோ்ந்த ராகதேவன் (26), அம்மாப்பேட்டை பிரபு (25), எடப்பாடி ஜீவானந்தம் (35), ராஜமாணிக்கம் (63), கிச்சிப்பாளையம் செல்வராஜ் (60), பெருமாள் கோயில் தெரு சுரேஷ் (38), பச்சப்பட்டி முனாப் (24), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சிவகுமாா் (53), தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(40) ஆகிய 9 பேரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையிலடைத்தனா். முன்னதாக அவா்களிடமிருந்து ஒரு மண்ணுளி பாம்பு, ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனங்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.