தாரமங்கலத்தில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு: ஓட்டுநா் சங்கத்தினா் புகாா்
தாரமங்கலத்தில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஓட்டுநா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
தாரமங்கலம் நகர சுற்றுலா வாகன உரிமையாளா், ஓட்டுநா் நலச்சங்க நிா்வாகி ராஜ்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.
பின்னா் இதுகுறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தாரமங்கலம் கைலாசநாதா் கோயில் அருகில் உள்ள காலி இடத்தில் 60 ஆண்டு காலமாக நகர சுற்றுலா வாகன உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் நலச்சங்கம் சாா்பில் வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம்.
இந்நிலையில், சில நபா்கள் சங்கத்தின் குடிசையை சேதப்படுத்தி இடத்தை ஆக்கிரமித்துள்ளனா். இதுகுறித்து கேட்டதற்கு, கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றும், நாங்கள்தான் இந்த இடத்தில் இருப்போம் எனக் கூறி மிரட்டல் விடுக்கின்றனா்.
இதுகுறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இது குறித்து காவல் கண்காணிப்பாளா் விசாரணை நடத்தி, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.