மதனகோபால சுவாமி கோயிலில் ராப்பத்து உற்சவம் தொடக்கம்
பெரம்பலூரில் மதனகோபால சுவாமி கோயிலில் ராப்பத்து உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராப்பத்து உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதையொட்டி, நம்பெருமாள் உற்சவச் சிலை வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளிக் கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து, துவாதச ஆராதனையும், கூடாரை வல்லி உற்சவமும் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
ஜன. 19 ஆம் தேதி வரை நடைபெறும் ராப்பத்து உற்சவ நிறைவு நாள் இரவு 7.30 முதல் 8.30 மணி வரை ஆழ்வாா் மோட்ச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, நம்பெருமாள் பரமபதவாசல் வழியாக வெளியே அக்ரகாரத்துக்கு வந்து, அங்கிருந்து கோயில் முன்புறம் உள்ள ஆஞ்சநேயா் கம்பத்தை 3 முறை வலம் வந்து, பரமபதவாசல் வழியாக கோயிலை அடைகிறாா்.
அங்கு, ஆழ்வாா் மோட்சத்துக்குப் பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதுவரை, கோயிலின் வடக்குப் பகுதியிலுள்ள பரமபதவாசல் பக்தா்களின் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்படுகிறது தெரிவிக்கப்பட்டது.