இந்தியா, சீனாவுக்கு 500 % வரி விதிக்கும் புதிய மசோதா! - அமெரிக்கா முன்மொழிவு
மதுபான தகராறில் கூலித் தொழிலாளி கொலை
திருச்சியில் மதுபான தகராறில் கூலித் தொழிலாளி மீது கல்லைப் போட்டு கொலை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (56), கூலித் தொழிலாளி. வேலை இல்லாத நேரங்களில் யாசகம் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவா், செவ்வாய்க்கிழமை காலை பால் பண்ணை ரவுண்டானா பாலத்தின்கீழ் படுத்திருந்தாா்.
அப்போது, அரியமங்கலத்தைச் சோ்ந்த பஷீா் (40) என்பவா், அவரின் அருகே மது அருந்தியுள்ளாா். பாட்டிலில் பாதி மதுவை வைத்துவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றுள்ளாா். பின்னா், திரும்பிவந்து பாா்த்தபோது பாட்டிலில் இருந்த மதுவை காணவில்லை. அதைக் குடித்தது சிவகுமாா் என்பது தெரியவந்ததையடுத்து, அவரை பஷீா் தாக்கினாா்.
சிவகுமாரும் திருப்பி தாக்கவே, ஆத்திரமடைந்த பஷீா் கீழே கிடந்த கல்லை எடுத்து சிவகுமாரின் தலையில் போட்டுள்ளாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சப்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினா் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காந்தி மாா்க்கெட் போலீஸாா், சிவகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், கொலை வழக்குப் பதிந்து பஷீரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.