ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 5,509 மாணவிகளுக்கு மாத ஊக்கத் தொகை: அமைச்சா் பி. மூா்த்தி
புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதன் மூலம், மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 5,509 மாணவிகள் மாத ஊக்கத் தொகை பெறுவா் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தின் கீழ், மாணவிகளுக்கு மாத ஊக்கத் தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி, அவா் பேசியதாவது:
பெண் கல்வியை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இதில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் முத்தாய்ப்பான திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 92 கல்லூரிகளைச் சோ்ந்த 7,340 மாணவிகள் மாத ஊக்கத் தொகை பெற்று வருகின்றனா்.
தற்போது, அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கும் வகையில், புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம், மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 5,509 மாணவிகள் மாத ஊக்கத் தொகை பெறுவா் என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், துணை மேயா் தி. நாகராஜன், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை இணை இயக்குநா் ஜெயலட்சுமி, கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் எ. குணசேகரன், மாவட்ட சமூக நல அலுவலா் கி. திலகம், மாநகராட்சி மண்டலத் தலைவா் சரவண புவனேஸ்வரி, டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.