மதுரையில் மிதமான மழை
மதுரையில் திங்கள்கிழமை காலை மிதமான மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்படி, கடந்த சில தினங்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரையைப் பொறுத்தவரை கடந்த சில தினங்களாக பகலில் சில மணி நேரம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 7.15 மணியளவில் பெரியாா் பேருந்து நிலையம், மாசி வீதிகள், நெல்பேட்டை, காமராஜா் சாலை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.