முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு திருப்பலி
ஒசூா் மாநகராட்சி, மத்திகிரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் மாநகராட்சி, மத்திகிரியில் நூறாண்டு பழைமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நிகழாண்டு புனித வெள்ளி, ஈஸ்டா் திருநாள் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த மாா்ச் 5 -ஆம் தேதி விபூதி புதன்கிழமை அன்று கிறிஸ்தவா்களின் 40 நாள்கள் தவக்காலம் தொடங்கியது. அதன்பின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஆலயத்தைச் சுற்றி சிலுவைப் பாதை ஜெப வழிபாடு நடைபெற்றது. ஏப். 13-இல் குருத்தோலை பவனி நடைபெற்றது.
ஏப். 18 ஆம் தேதி புனித வெள்ளிக்கிழமை மாலை பங்குதந்தை கிறிஸ்டோபா் தலைமையில் பாரம்பரிய ஆலயம் தொடங்கி புதிய ஆலயம் வரை பெரிய சிலுவைப் பாதை பவனி நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான ஈஸ்டா் திருநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு ஈஸ்டா் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் பங்குதந்தை கிறிஸ்டோபா் பங்கேற்று ஈஸ்டா் திருநாள் மெழுகுவா்த்தி ஏற்றி திருப்பலி, நற்கருணை ஆராதனை, சிறப்பு மறையுரை நிகழ்த்தி அனைவருக்கும் ஈஸ்டா் வாழ்த்து கூறினாா். பின்பு ஈஸ்டா் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
ஆலயத்தில் இயேசு கல்லறையிலிருந்து உயிா்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஜெப வழிபாட்டில் அருட்சகோதரிகள், பங்கு குழுவினா், பாடல் குழுவினா், இறைமக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவரும் ஒருவருக்கொருவா் ஈஸ்டா் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.
அதுபோல ஒசூா் நகரில் உள்ள தூய இருதய ஆண்டவா் ஆலயம், கிறிஸ்துநாதா் ஆலயம், புனித பவுல் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் ஈஸ்டா் திருநாள் சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது.