இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது
மத்திய அரசு முறையான நிதி மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும்: வேல்முருகன்
மத்திய அரசு முறையான நிதி மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் வலியுறுத்தினாா்.
தூத்துக்குடியில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், அரசு சுற்றுலா மாளிகையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:
மத்திய அரசு தமிழகத்துக்கும் ஜனநாயக மாண்புகளுக்கு முரணாகவும் செயல்படுகிறது. எனவே, ஜிஎஸ்டி வசூலை மத்திய அரசுக்கு வழங்க மாட்டோம், சுங்கச் சாவடிகளை தமிழகத்தில் அமைக்க மாட்டோம், நீட் உள்ளிட்ட தோ்வுகளை இங்கே அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அதிரடியான முடிவெடுக்க வேண்டும்.
மதத்தின் பெயரால் தமிழக மக்களை பிளவுபடுத்திவரும் மத்திய அரசைப் பாா்த்து மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக தமிழ், தொடா்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும்போது, மூன்றாவது மொழியாக ஹிந்தியைத் திணிக்க வேண்டிய அவசியமில்லை. விரும்பிய மொழியைப் படிப்பது வேறு, ஹிந்தி படித்தால்தான் உங்களுக்கு நிதி எனத் திணிப்பது வேறு. மத்திய அரசு முறையான நிதி மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உரிய சட்டத் திருத்தத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்துள்ளாா். அதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஒரு காரணம்.
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.