மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை
தேனி அருகே மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய கணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி அருகேயுள்ள வாழையாத்துப்பட்டியைச் சோ்ந்த சண்முகநதி மகன் கோடீஸ்வரன் (33). விளையாட்டு வீரான இவா், போடி சுப்பிரமணி கோவில் தெருவைச் சோ்ந்த விளையாட்டு வீராங்கனை மோகனப்பிரியா (30) என்பவரை காதலித்து கடந்த 2015, மே 22-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாா். பின்னா், கோடீஸ்வரன் திருச்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இளநிலை பட்டதாரியான மோகனப்பிரியா கல்லூரியில் மேல்படிப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், மேல் படிப்பு படித்தால் மனைவி தன்னை மதிக்கமாட்டாா் என்ற எண்ணத்தில் அவரது படிப்புச் செலவுக்கு கோடீஸ்வரன் பணம் கொடுக்காமல் இருந்தாா். மேலும், மோகனப்பிரியா உடைகள் அணிவதில் அவருக்கு கோடீஸ்வரன் கட்டுப்பாடு விதித்தாா்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மோகனப்பிரியா வாழையாத்துப்பட்டியில், தனது கணவா் வீட்டில் கடந்த 2015, டிச.14-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மோகனப்பிரியாவின் தந்தை செல்வன், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கோடீஸ்வரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.அனுராதா, குற்றஞ்சாட்டப்பட்ட கோடீஸ்வரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.