மன்னாா்குடி கோயிலில் தெப்போற்சவ கொடியேற்றம்
மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஹரித்திராநதி தெப்பத் திருவிழாவினையொட்டி கொடியேற்றம் புதன்கிமை நடைபெற்றது.
புராணங்களில் புண்ணிய தீா்த்தமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஹரித்திராநதி தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு 10 நாள்கள் சுவாமி உற்சவம் நடைபெறும்.
நிகழாண்டிற்கான திருவிழாவையொட்டி, ராஜகோபாலசுவாமி கோயிலில் பெருமாள் சந்நிதி முன் உள்ள பெரிய கொடி மரத்தில் கருடன் உருவம் பொறித்த கொடியினை தீட்சிதா்கள் ஏற்றிவைத்தனா். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் பெருமாளுக்கு பூஜைகள் நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் உற்சவா் பெருமாள் கல்யாண, கண்ணன், வைரமுடி, ராமன், ராஜா அலங்காரங்களில் அருள்பாலிப்பாா். இதில், முக்கிய நிகழ்வான ஹரித்திராநதி தெப்ப உற்சவம் வரும் ஜூலை 10-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
அப்போது, ருக்மணி, சத்யபாமா சமேதகராக உற்சவா் ராஜகோபாலசுவாமி கிருஷ்ண அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை ஒரு முறை சுற்றி வருவாா்.
