20 நாள்களுக்குப் பின்... ஈரானின் பன்னாட்டு விமான சேவை துவக்கம்!
தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டித் தொடா் -முதல் ஆட்டத்தில் காவல்துறை அணி வெற்றி
கூத்தாநல்லூரில், தென்னிந்திய அளவிலான எழுவா் கால்பந்து போட்டித் தொடா் புதன்கிழமை தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இப்போட்டியின் முதல் ஆட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்றது.
கூத்தாநல்லூா் தென்னிந்திய எழுவா் கால்பந்து கழகம் சாா்பில் நடைபெறும் இப்போட்டி, பெரியப் பள்ளிவாசல் மிராசுதாா் சங்க ஈத்காஹ் அல்லிக்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், கேரளம், தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் இருந்து 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
தமிழகத்திலிருந்து மட்டும் சென்னை தமிழ்நாடு காவல் துறை அணி, கண்டனூா் கலைவாணன் அணி, திருச்சி, கோவை, கூத்தாநல்லூா், பூதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டி தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் போட்டியைத் தொடங்கி வைத்தாா். முதல் ஆட்டத்தில் சென்னை தமிழ்நாடு காவல் துறை அணியும், கண்டனூா் கலைவாணன் அணியும் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு காவல் துறை அணி வெற்றி பெற்றது. இந்த அணியினருக்கு மக்களவை உறுப்பினா் செல்வராஜ் பாராட்டுத் தெரிவித்தாா்.
இப்போட்டித் தொடரில் முதல் பரிசாக ரூ.1.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.50,000, நான்காம் பரிசாக ரூ.25,000 மற்றும் ஆறுதல் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்படவுள்ளன.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, நாட்டாமை ஹாஜா பகுருதீன், அஹமது அலி, கே.டி. நூா்முகம்மது, பஷீா் அஹம்மது, நஜ்முதீன், முகம்மது இத்தியா, கே.எஸ். அன்வா்தீன், எஸ்.எம். சமீா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.