`மன்னிப்பு கேட்க முடியாது; முட்டாள்தனம்’ - ஷிண்டேவை துரோகி என்று சொல்லிய நடிகர் கம்ரா விளக்கம்
மும்பையில் நேற்று முன் தினம் இரவு நடந்த காமெடி ஷோ படப்பிடிப்பில் காமெடி நடிகர் குனால் கம்ரா மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குறித்து பேசினார். பின்னர் அவர் இந்தி பாடல் ஒன்றை மாற்றி எழுதி, `தானேயில் ஆட்டோ ஓட்டிய ஏக்நாத் ஷிண்டே துணைமுதல்வரானது குறித்தும், அவர் சிவசேனாவை உடைத்தது குறித்தும், அவரை துரோகி என்று விமர்சித்து’ பாடலை பாடினார்.
இப்பாடல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து படப்பிடிப்பு நடந்த மும்பை கார்ரோட்டில் உள்ள ஸ்டூடியோவை சிவசேனா வினர் சூரையாடினர். அதோடு மும்பை மாநகராட்சியும் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி அந்த ஸ்டூடியோவில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் நடந்திருப்பதாக கூறி இடித்து தள்ளினர். அங்கு கட்டப்பட்டு இருந்த தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டது. அதோடு குனால் கம்ரா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்
அவரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தான் தெரிவித்த கருத்துக்காக குனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்த கருத்தை ஏற்கமுடியாது என்று குனால் தெரிவித்துள்ளார். அதேசமயம் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும், கோர்ட் உத்தரவிட்டால் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் குனால் கம்ரா தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் குனால் போலீஸாரை தொடர்பு கொண்டும் பேசி இருக்கிறார். அப்படி இருந்தும் மும்பையில் உள்ள குனால் வீட்டிற்கு நேற்று மும்பை போலீஸார் சென்றனர். அங்கு இருந்த குனால் பெற்றோரிடம் வழக்கு பதிவு செய்திருப்பது குறித்து தெரிவித்து விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி நோட்டீஸ் கொடுத்துவிட்டு சென்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே, `வன்முறையில் தனக்கு உடன்பாடு இல்லை, அதேசமயம் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். குனால் கம்ரா உத்தவ் தாக்கரே கட்சியில் பணம் வாங்கிக்கொண்டு இது போன்று பேசியிருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

முட்டாள்தனம்
இதையடுத்து குனாலின் வங்கிக்கணக்கு விபரங்களையும், குனாலின் போன் உரையாடல் விபரங்களையும் ஆய்வு செய்ய மும்பை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக குனால் கம்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நான் தெரிவித்த கருத்துக்களுக்கு படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோ அல்லது எந்த வித அரசியல் கட்சியோ காரணம் கிடையாது. எனது ஷோ படப்பிடிப்பு நடந்த இடம் அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கும் ஒரு இடம். எனது நிகழ்ச்சிக்கு படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவோ அல்லது வேறு யாரோ அல்லது அரசியல் கட்சியோ நான் தெரிவித்த கருத்துக்களுக்கு காரணம் கிடையாது.
ஒரு நகைச்சுவை நடிகரின் வார்த்தைகளுக்காக ஒரு இடத்தைத் தாக்குவது என்பது, உங்களுக்கு பரிமாறப்பட்ட பட்டர் சிக்கன் பிடிக்கவில்லை என்பதற்காக தக்காளி ஏற்றிச் செல்லும் லாரியை கவிழ்ப்பது போன்ற முட்டாள்தனம்.
நான் எந்த கும்பலுக்கு பயப்படவில்லை. மறைந்து கொள்ளப் போவதில்லை. காவல்துறை மற்றும் நீதிமன்றங்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். நகைச்சுவைக்கு நாசவேலைதான் சரியான பதில் என்று முடிவு செய்தவர்களுக்கு எதிராகவும், முன்னறிவிப்பு இல்லாமல் ஹாபிடேட்டுக்கு வந்து, அந்த இடத்தை சுத்தியலால் இடித்த மும்பை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்டம் நியாயமாகவும் சமமாகவும் பயன்படுத்தப்படுமா?.
எனக்குத் தெரிந்தவரை, நமது தலைவர்களையும் நமது அரசியல் அமைப்பு முறையையும் கேலி செய்வது சட்டத்திற்கு எதிரானது அல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.