BR Shetty: ரூ.12,478 கோடி மதிப்புள்ள நிறுவனம், ரூ.74-க்கு விற்கும் நிலை; காரணம்? - வாழ்ந்துகெட்ட கதை
நமது கிராமங்களில் 'இது வாழ்ந்துகெட்ட குடும்பம்' எனக் குறிப்பிடும்படியான ஒரு குடும்பம் அடையாளத்துக்கு இருக்கும். எப்போதெல்லாம் ஆடம்பர செலவுகள் செய்வோமோ அப்போதெல்லாம் அந்தக் குடும்பத்தை உதாரணமாகக் காண்பித்து எச்சரிப்பார்கள். அப்படி உலக மக்களுக்கு பெரும் உதாரணமாக மாறி நிற்கிறார் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒருவர்.
பல நிறுவனங்கள், பல மருத்துவமனைகள்... ஏன் துபாயில் புர்ஜ் கலிபாவில் இரண்டு தளங்களை சொந்தமாக வைத்திருந்தவர். இப்போது அவர் செய்த ஒரே ஒரு தவறு அவரை அதளபாதாளத்துக்கு கொண்டுசென்றிருக்கிறது. அவர்தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர். ஷெட்டி.
பி.ஆர். ஷெட்டியின் எழுச்சி
ஆகஸ்ட் 1, 1942 அன்று, பிரிட்டிஷ் இந்தியாவின் மதராஸ் நிர்வாகத்தில் (கர்நாடகா) உடுப்பியில் பிறந்தவர் பாவகுத்து ரகு ராம் ஷெட்டி (பி.ஆர். ஷெட்டி). நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது வாழ்க்கையை ஒரு மருந்து விற்பனையாளராகத் தொடங்கினார். 1973-ம் ஆண்டு, வெறும் 8 டாலர்களுடன் 31 வயதில் துபாய்க்கு குடிபெயர்ந்தார். ஆரம்பத்தில் வீடு வீடாகச் சென்று மருந்துகளை விற்று வாழ்க்கை நடத்தினார்.
குறுகிய காலத்திலேயே, பி.ஆர். ஷெட்டி செல்வந்தர்கள், செல்வாக்கு வாய்ந்தவர்களுடன் தொடர்புகளை உருவாக்கிக்கொண்டார். சில ஆண்டுகளில் துபாயில் New Medical Center Health (NMC) எனும் தனியார் மருத்துவ நிறுவனத்தை தொடங்கினார். இதுதான் அமீரகத்தின் முதலாவது தனியார் மருத்துவ சேவை நிறுவனமாகும்.
NMC-ன் வளர்ச்சி
NMC மருத்துவமனையை ஆரம்பத்தில் அவரது மனைவி சந்திரகுமாரி ஷெட்டி நிர்வகித்து வந்தார். விரைவிலேயே , UAE-வில் இதுவே மிகப்பெரிய தனியார் மருத்துவ நிறுவனமாக வளர்ந்தது. தற்போது இந்த நிறுவனம் வருடத்திற்கு நான்கு மில்லியன் நோயாளிகளுக்கு மருத்துவச் சேவையை வழங்குகிறது. முதல் அமீரக தனியார் மருத்துவ நிறுவனமாகவும், லண்டன் பங்குச் சந்தையின் FTSE 100 இன்டெக்ஸில் இடம் பெற்ற முதலாவது அபுதாபி நிறுவனமாகவும் தன்னை வளர்த்துக்கொண்டது.
UAE Exchange
1970-களின் இறுதியில், UAE-வில் வாழும் இந்தியர்கள் தங்கள் வீட்டிற்கு பணம் அனுப்புவதில் எதிர்கொண்ட பிரச்சனையை கவனித்த பி.ஆர். ஷெட்டி UAE Exchange என்ற நிறுவனத்தையும் நிறுவினார். இந்த நிறுவனம் வெளிநாட்டு செலாவணி, பணப்பரிமாற்றம் போன்ற சேவைகளை வழங்கியது. 2016-க்குள், 31 நாடுகளில் 800 கிளைகள் திறக்கப்பட்டன. மேலும், 2003-ம் ஆண்டு, பி.ஆர். ஷெட்டி அபுதாபியில் உள்ள NMC Neopharma என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தையும் தொடங்கினார். இது இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பங்கு வீழ்ச்சி
பல துறைகளில் தனது வியாபாரங்களை விரிவுபடுத்திய பி.ஆர். ஷெட்டியின் செல்வம் காலத்திற்கேற்ப அதிகரித்து 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 20,000 கோடி) உச்சத்தில் இருந்தது. தனியார் ஜெட் விமானங்கள், ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், துபாயில் பிரம்மாண்ட வீடுகள், மேலும் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக இரண்டு முழு மாடிகள் எனப் ஆடம்பரமாக வாழ்ந்துவந்தார்.
ஆனால், 2019-ல், Muddy Waters Research என்ற அமெரிக்க நிறுவனமொன்று, பி.ஆர். ஷெட்டியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடிக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பியது. அவர் தனது முதலீட்டாளர்களிடம் 1 பில்லியன் டாலர் கடனை மறைத்து, போலியான வருவாய் கணக்குகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டியது. இதன் விளைவாக, அவரது நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தன. பி.ஆர்.ஷெட்டியின் நிறுவனம் பங்கு மோசடிக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதனால் லண்டன் பங்குச் சந்தையின் FTSE 100 இன்டெக்ஸிலிருந்து நீக்கப்பட்டது.
பல்வேறு நெருக்கடிகள்
2020-ல், பி.ஆர். ஷெட்டி நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து விலகினார். அதே ஆண்டில், NMC Health நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததால், UK-யில் அதன் நிர்வாகம் சிக்கலுக்குள்ளானது. அபுதாபி வணிக வங்கி, UAE Attorney General’s Office-ல் NMC-க்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில் UAE மத்திய வங்கி, பி.ஆர். ஷெட்டியின் வங்கி கணக்குகளை முடக்கியது.
தொடர்ந்து பல தரப்பிலிருந்தும் எழுந்த நெருக்கடிகளால் அவரின் பங்குகளை விற்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அதனால், 12,478 கோடி மதிப்புள்ள நிறுவனம் வெறும் ரூ.74-க்கு இஸ்ரேல் -UAE கூட்டணிக்கு விற்பனையானது தெரிவிக்கப்பட்டுள்ளஊ. அவரின் சொத்துமதிப்புகள் குறைந்ததன் காரணமாக, பி.ஆர். ஷெட்டி "Forbes" பில்லியனர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர்மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
