`ஷிண்டே துரோகி’ என்று சொன்ன காமெடி நடிகர் - படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவை இடித்த மாநகராட்சி
மும்பையில் நேற்று முந்தினம் இரவு நடந்த காமெடி ஷோவில் காமெடி நடிகர் குனால் கம்ரா, இந்தி பாடல் ஒன்றை மாற்றி அமைத்து பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இப்பாடலில் மகாராஷ்டிரா துனை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை துரோகி என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் சிவசேனா தொண்டர்கள் நேற்று இரவே காமெடி ஷோவின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட மும்பை ஸ்டூடியோவில் புகுந்து அடித்து சூரையாடினர்.
இதையடுத்து சிவசேனா தொண்டர்கள் 19 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதோடு ஷோ நடத்திய குனால் கம்ரா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கோரி போலீஸில் சிவசேனாவினர் புகார் செய்தனர். இதையடுத்து கம்ரா மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காமெடி ஷோவின் படப்பிடிப்பு மும்பை கார்ரோடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது. தற்போது தலைமறைவாக இருக்கும் குனால் கம்ரா கொடும்பாவியை சிவசேனா தொண்டர்கள் எரித்து போராட்டம் நடத்தினர். போலீஸார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்விவகார்த்தில் குனால் மன்னிப்புப்கேட்க வேண்டும் என்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து இருந்தார். அவர் உத்தவ் தாக்கரே கட்சியில் பணம் வாங்கிக்கொண்டு ஏக்நாத் ஷிண்டேயை விமர்சித்ததாக அவரது கட்சியினர் குற்றம் சாட்டி இருந்தனர்.
அவர்களது குற்றச்சாட்டை மறுத்துள்ள குனால் கம்ரா தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு தேவைப்பட்டால் எனது வங்கிக்கணக்கு விபரங்களை பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காமெடி ஷோ படப்பிடிப்பு நடந்த மும்பை ஸ்டூடியோவில் சட்டவிரோதமாக கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறி முன்னறிவிப்பு இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் இடித்துள்ளனர்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஏற்கனவே, கிரிமினல்கள் வீடுகளை, சொத்துக்களை புல்டோசர் கொண்டு இடித்து வந்தனர். அதே கலாச்சாரம் மகாஷ்டிராவிலும் தொடர்கிறது. மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்த உத்தவ் தாக்கரே காமெடி நடிகர் உண்மையைத்தானே பேசி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்